ஏர்-இந்தியா சேவையில் முதன் முதலாக “ஏ320 நியோ” விமானம்

ஏர்-இந்தியா விமான சேவையில் முதன்முதலாக “ஏர்பஸ் 320 நியோ” (Airbus A320Neo) ரக விமானம் இணைந்துள்ளது. இதுகுறித்து ஏர்-இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஷ்வனி லோஹனி (Ashwani Lohani) தெரிவித்துள்ளதாவது:

“ஏ320 நியோ” ரக விமானம் முதன்முதலாக ஏர்-இந்தியாவின் விமான சேவையில் வியாழக்கிழமை இணைந்தது. அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட நவீன ரக என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் “12” உயர்வு வகுப்பு இருக்கைகள் உள்ளிட்ட “162” இருக்கைகளைக் கொண்டது. இந்த விமானத்தை சர்வதேச போக்குவரத்துக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த விமானம் குவைத் நாட்டின் அலஃப்கோ (ALAFCO) நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்குள் இதே வகையைச் சேர்ந்த மேலும் “13” விமானங்களை ஏர்-இந்தியா நிறுவன விமான சேவையில் இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். தற்போது ஏர்-இந்தியா குழுமத்தில் “138” விமானங்கள் உள்ளன என்று கூறினார்.

புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கப்படி தண்ணீர் பீச்சியடித்து மரியாதை செய்யப்பட்டு “ஏ320 நியோ” விமானம் முதன்முதலாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இண்டிகோ மற்றும் கோ-ஏர் (IndiGo and GoAir) நிறுவனங்களை அடுத்து “ஏ320 நியோ” ரக விமானங்களை சேவையில் பயன்படுத்தும் மூன்றாவது நிறுவனம் ஏர்-இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்-இந்தியா நிறுவனம் வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மொத்தம் “ஏ320 நியோ” வகையைச் சேர்ந்த 29 விமானங்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

அலஃப்கோ, ஜி.இ.கேப்ஸ் மற்றும் சிஐடி (ALAFCO, GECAPS and CIT) நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 22 விமானங்களை குத்தகைக்கு எடுக்க ஏர்-இந்தியா நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையில் 20 சதவீத வளர்ச்சியை எட்டும் வகையில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட இந்த வகை விமானங்களை சேவையில் இணைத்துக் கொள்வதில் ஏர்-இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

தற்போதுள்ள விமானங்களைக் காட்டிலும் “ஏ320 நியோ” ரக விமானங்களில் எரிபொருள் பயன்பாடு 15 சதவீதம் குறைவாக உள்ளது.

Tagged with: