கூகுளின் டிரைவரில்லாத கார் அறிமுகம்

கூகுள் நிறுவனம் தனது தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பலவற்றை தயாரித்துள்ளது. அந்த வகையில் 2009 ஆண்டு  முதல் தானோட்டி வாகன ஆராய்ச்சியை மேற்க்கொண்டு வந்தது. இப்போது தானோட்டி வாகன பிரிவை, தனி நிறுவனமாக அண்மையில் அறிவித்தது. ‘வேமோ’ (Waymo) என்ற பெயரில் இயங்கும் அந்த நிறுவனம், பல டஜன் வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி இதுவரை, 20 லட்சம் மைல்களுக்கு நிஜ போக்குவரத்துள்ள சாலைகளில் சோதனைகளை நடத்தியுள்ளது.

 

அப்போது நான்கைந்து சிறு விபத்துக்களைத் தவிர, வேறு யாருக்கும் தொந்தரவில்லாமல் பாதுகாப்பாக, தானோட்டி வாகனங்களை பரிசோதித்து வருகிறது வேமோ (Waymo). சோதனைகளின் போது மனித ஓட்டுனர் ஒருவர் வாகனத்தில் இருந்தாலும், 5,000 மைல்களுக்கு ஒரு முறை தான், அவர் தானோட்டி மென்பொருளிடமிருந்து வாகனத்தை செலுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டி வந்தது என்கிறது. 

 

வேமோவின் வண்டிகள் பாதுகாப்பானவை என, நிரூபித்த பின், அமெரிக்காவில் நான்கு மாகாணங்களில் இவற்றை பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளது கூகுள்.  தானாகவே வாகனத்தை செலுத்தும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மட்டுமல்ல, வாகனத்தின் சகல கோணங்களிலும், 200 அடி துாரம் வரை, ‘பார்த்து’ உணரும் லேசர் சக்தியுள்ள, ‘லிடார்’, ரேடியோ அலைகளை பயன்படுத்தும் ரேடார் மற்றும் பல நுாறு உணர்வான்கள், ஒளிப்படக் கருவிகள் என, அனைத்தையும் வேமோவே தயாரிக்கப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது கூகுள். பிற வாகன தயாரிப்பாளர்களுக்கும் இத்தொழில்நுட்பங்களை விற்க, வேமோ தயாராக உள்ளது.