டிஜிட்டலில் ‘பாட்ஷா’ ரிலீஸ்: திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை

மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ள படங்களில் ‘பாட்ஷா’ படத்தின் மெருகூட்டப்பட்ட வடிவத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.

ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் ‘பாட்ஷா’. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். 1995-ம் ஆண்டு இப்படம் வெளியானது.

தற்போது ‘பாட்ஷா’ படத்தை மெருகூட்டி 5.1 ஒலி வடிவத்தில் மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘பாட்ஷா’ படத்தைத் தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், தங்களுடைய நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதால் மீண்டும் இப்படத்தை வெளியிடவுள்ளது.

இப்படத்தில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் பேசிய டப்பிங்கை படக்குழு எதுவுமே செய்யவில்லை. பின்னணி இசையை மட்டும் தற்போதுள்ள கருவிகளை வைத்து புதிதாக உருவாக்கி சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் தேவா.

‘குற்றம் 23’, ‘முப்பரிமாணம்’, ‘யாக்கை’ உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் திரையரங்க உரிமையாளர்கள் ‘பாட்ஷா’வுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். சென்னை சத்யம் திரையரங்கில் 4 காட்சிகள் ஒதுக்கியுள்ளார்கள். இதே போன்று பல்வேறு முன்னணி திரையரங்கிகளிலும் ஒதுக்கியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.