ரஜினி ஜோடியாக வித்யா பாலன்?

இயக்குநர் பா.இரஞ்சித் – ரஜினி மீண்டும் இணையும் படத்தில் ரஜினி ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கினார். இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. 

இப்போது ரஜினி – பா. இரஞ்சித் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar films) தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்துக்குப் பிறகு இது ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கபாலி படத்தில் முதலில் வித்யா பாலன் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவரால் நடிக்கமுடியாமல் போகவே அந்த வாய்ப்பு ராதிகா ஆப்தேவுக்குச் சென்றது.

இந்நிலையில் இந்தப் படத்திலும் வித்யா பாலனை நடிக்க வைக்க மீண்டும் அவரை அணுகியது படக்குழு. கதையைக் கேட்ட வித்யா பாலன், நடிக்கச் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. 

தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் இதுவரை ஒரு தமிழ்ப் படத்திலும் வித்யா பாலன் நடித்ததில்லை. லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் வித்யா பாலன் தான். ஆனால் பிறகு அவர் அப்படத்திலிருந்து விலகியதால் மீரா ஜாஸ்மினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பலவருடங்களுக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகவுள்ளார் வித்யா பாலன்.