பாகுபலி 2 தான் படையல் விருந்து: இயக்குநர் ராஜமெளலி உறுதி!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம்பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ (Baahubali: The Conclusion) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் ராஜமெளலி, ஒரு பேட்டியில் கூறியதாவது:

பாகுபலியின் முதல் பாகத்தில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தினோம். அதனால் கதைக்குள் அந்தளவுக்குப் போகமுடியவில்லை. முதல் பாகம் ஸ்டார்ட்டர்தான். இரண்டாம் பாகம்தான் படையல் விருந்து அளிக்கப் போகிறது.என் எல்லா சக்தியும் இந்தப் படத்துக்காக செலவழிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடியையும் ரசித்துச் செய்கிறோம். பாகுபலியுடன் தொடர்புடைய நாவல்கள், அனிமேஷன் தொடர்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்

நான் நல்லதொரு கதைசொல்லி. ஆனால் நல்ல இயக்குநர் கிடையாது. கதை சொல்ல ஆரம்பிக்கும்போது நல்ல நம்பிக்கையுடன் இருப்பேன். ஆனால் அந்த நம்பிக்கை படம் இயக்கும்போது கிடைப்பதில்லை. பல சந்தேகங்கள் என் மூளையில் ஓடுகின்றன. நான் என்ன செய்கிறேன் என்பது பற்றி முழு புரிதல் இருக்காது. அதனால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்

ஆனால் ஒரு கதையைச் சொல்லும்போது நான் சரியாகச் செய்வதாக எண்ணுகிறேன். பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்க வைக்கிறேன் என நினைக்கிறேன்.படப்பிடிப்புத்தளத்தில் நான் அதிகமாகக் கத்துவேன். சிறிய விஷயங்கள்கூட என்னை எரிச்சல்படுத்தும். சில தவறுகள் நடக்கவும் விட்டுவிடுவேன். நான் படப்பிடிப்புத்தளத்தில் சாதாரண மனிதனாகவே இருப்பேன்

பெரிய பட்ஜெட் படங்களில் பண்ணுவதில்தான் எனக்கு ஆர்வம் உண்டு என்பதில்லை. கதையின் இயல்புதான் படத்தின் பிரமாண்டத்தைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு கதையும் அதற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. கதைதான் நடிகர்கள், பட்ஜெட், குழு என பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது. பட்ஜெட்டைக் கொண்டு கதை அமைக்கப்படுவதில்லை. பாகுபலி போன்ற ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று நீண்ட நாளாகக் காத்திருந்தேன். கதை என்னை ஈர்க்கும்போது சிறிய படங்களையும் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.