விண்வெளியில் இந்திய ஆய்வுக்கூடம்…!

அண்மையில் இந்துாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்ததாவது:

பூமியிலிருந்து 400 கி.மீ., உயரத்தில் மிதக்கும் விண்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவ, நம் விஞ்ஞானிகளால் முடியும்.

அண்மையில் 104 செயற்கைக் கோள்களை ஒரே தடவையில் வெற்றிகரமாக ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ. இதனை விட பெரிய சாதனை விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு விண்வெளி கூடம் அமைப்பது தான்.

“அரசும், மக்களும் எங்களுக்கு வேண்டிய நிதியையும் நேரத்தையும் தந்தால் எங்கள் விஞ்ஞானிகள் அதை செய்யத் தயார். ஆனால் ஒரு திட்டத்தால் உடனடியாக என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தான் நாம் கவனிக்கிறோம் என்பதால் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு நம் நாட்டில் முக்கியத்துவம் தருவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.விண்வெளியில் நம் வீரர்கள் வசிப்பதற்கான பாதுகாப்பான அறை, சுவாசிப்பதற்கும், காற்றழுத்தத்திற்குமான சாதனம், விண்வெளியிலிருந்து பூமியின் காற்று மண்டலத்திற்கு திரும்புகையில் ஏற்படும் உராய்வு வெப்பத்தை தாங்கும் ஓடுகள் பலமுறை பயன்படுத்தக்கூடிய ராக்கெட் போன்ற தொழிற்நுட்பங்களை, இஸ்ரோ விஞ்ஞானிகள் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “எனவே இன்றே மக்களும் அரசும் உத்தரவிட்டால் நாங்கள் விண்வெளி ஆய்வுக்கூடத்தை அமைக்கத் தயார்” என்று அவர் கூறியுள்ளார்.

Tagged with:     , ,